எம்.எல்.எம் (MLM) என்றழைக்கப்படும் மல்டி லெவல் மார்கெட்டிங் (MULTI LEVEL MARKETING) முறை மூலம் QI நிறுவனம் இயங்குகிறது. ஹாங்காங்கில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இந்தோனேசியா, இந்தியா என பல நாடுகளுக்கு தனது தொழிலை விரிவுபடுத்தினார் விஜய் ஈஸ்வரன். தங்கம் மற்றும் வெள்ளிக்காசு விற்பனை மூலம் தனது மோசடிப் பயணத்தை தொடங்கியது QI நிறுவனம். இதன் இந்திய கூட்டாளி விஷான் டைரெக்ட் செல்லிங் (VIHAAN DIRECT SELLING) என்ற நிறுவனம். பில்லியர்ட்ஸ் வீரரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான மைக்கேல் பெரேராதான் இதன் உரிமையாளர்.
இந்த நிறுவனம்தான் கியூ நெட் (QNET) மோசடியை இந்தியா முழுவதும் அரங்கேற்றியுள்ளது. ஆன் லைன் வர்த்தகம் என்பதுதான் கியூ நெட்டின் (QNET) அடிநாதம். ஏற்கெனவே கியூ நெட்டில் (QNET) சேர்ந்தவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அந்த திட்டத்தில் சேரும்படி அழைப்பு விடுப்பார். ஆன் லைன் வர்த்தகம். கை நிறைய காசு. மற்ற தொழிலை காட்டிலும் விரைவாக அதிக வருவாயை ஈட்ட முடியும் எனக்கூறுவார்களே தவிர அது என்னவென்று தெளிவாக சொல்ல மாட்டார்கள். பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து சில லட்சங்கள் வரை கரந்து விடுவார்கள்.
மூளைச்சலவை செய்வதற்கு இந்தக் கும்பல் காபி ஷாப், மால்கள் மற்றும் பெரிய திருமண மண்டபங்களை தேர்வு செய்யும். என்ன பிசினஸ் என கேட்டால் பின்னால் புரியும் என்பார்கள். இப்படி பேசிப்பேசி பணத்தை பறித்த பின்தான் இந்தக் கும்பலின் உண்மை முகம் தெரிய வரும். 2019 நிலவரப்படி அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழகத்தில் சற்று ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் கியூ நெட் (QNET) கும்பலிடம் சிக்கி சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை இழந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கியூ நெட் (QNET) மோசடி அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக கடந்த 2019 ஜனவரி மாதம் 58 பேரை தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். கியூ நெட் (QNET) நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்ததற்காக பிரபல நடிகர்கள் ஷாருக்கான், பொம்மன் இரானி, அனில் கபூர், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், நடிகை பூஜா ஹெக்டே, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு சைபராபாத் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.
விஷான் டைரெக்ட் செல்லிங் (VIHAAN DIRECT SELLING) நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பெரேரா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கியூ நெட் (QNET) மோசடி தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷான் டைரெக்ட் செல்லிங் (VIHAAN DIRECT SELLING) ஒரு மோசடி நிறுவனம் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் மக்கள் ஏமாறுவது மட்டும் நின்றபாடில்லை. கியூ நெட் (QNET) கும்பல் மக்களை ஏமாற்றியது மட்டுமின்றி பிறரை எப்படி ஏமாற்றுவது என அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது என மும்பை உயர்நீதிமன்றம் கூறியதே இந்த மோசடியின் தீவிரத்தை உணர்த்துகிறது.