அதிரை மக்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் ஆணையருக்கு கௌரவம்.. (ஹானஸ்ட்) லயன்ஸ் சங்கத்தின் செயலால் கடும் அதிருப்தி

Editorial
0
Ads: Crescent builders
அதிரை நகராட்சி ஆணையராக இருந்த சித்ரா சோனியா கடந்த சில நாட்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து அதிரையில் இருந்து புறப்பட்ட முன்னாள் ஆணையருக்கு சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஹானஸ்ட் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து பிரிவு உபசார மரியாதை செய்துள்ளனர். இந்த புகைப்படம் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காரணம், முன்னாள் ஆணையர் சித்ரா சோனியாவின் செயல்பாடுகள் தான். ஆம் தனது பதவி காலத்தில் சித்ரா சோனியா  அரசு அதிகாரிபோல் செயல்படாமல் அரசியல்வாதிபோல் செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரத்தில் பள்ளியின் போர்டை புல்லோசரைவிட்டு உடைக்க விட்டது அர்டா நில விவகாரத்தில் திமுக நகர செயலாளருக்கு ஆதரவாக செயல்பட்டது, நகராட்சியுடன் கிராமங்களை இணைக்கும் விவகாரம், பேருந்து நிலைய கடைகள் ஏலம், சாலையில் திரியும் நாய், மாடு பிரச்சனை போன்றவற்றில் அவரது  செயல்பாடுகள் மோசமாக இருந்தன.

அதேபோன்று தங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி புகார் அளிக்க செல்பவர்கள் மீதே குறை சொல்வது, உள்ளூர் ஊடகங்களின் பதிவுகளை புறந்தள்ளி எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க முயன்றது, கேலி செய்யும் வகையில் பேசுவது என சித்ரா சோனியா அவர்களின் செயல்பாடுகள் பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்தன. 'இப்படிப்பட்ட ஆணையர் அதிரைக்கு வேண்டாம்.. வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.' என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பேசும் அளவுக்கு நிலைமை மோசமான நிலையில் தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இவை அனைத்தையும் அறிந்த பிறகும் அப்படிப்பட்ட அதிகாரிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தி இருப்பது அவர் மீதான புகார்களை மறக்கடிக்க செய்யும் முயற்சி அன்றி வேறில்லை. மேலே நாம் குறிப்பிட்ட எந்த பிரச்சனைக்காகவும் குரல் கொடுக்காத சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் நபர்கள் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் என்று கூறிக்கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தி இருப்பதன் பின்னணியில் வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. 

பொதுவாகவே இதுபோன்ற என்ஜிஓக்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்காமல் யார் பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார்களோ அத்தகைய அதிகாரிகள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள், பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அவர்களுக்கு விருதுகளை வழங்குவது, பொன்னாடை போர்த்தி கௌரவிப்பது, மேடை ஏற்றி புனிதர்கள்போல் காட்டுவது போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள். 

இதன் மூலம் அந்த என்ஜிஓக்களின் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஆதாயங்கள் கிடைக்கின்றன. என்ஜிஓவுக்கு இத்தகைய நபர்கள் வழங்கும் நிதி உதவி கடந்து, அவர்களை இதன் மூலமாக கைக்குள் போட்டுக் கொண்டு தங்கள் வியாபார தேவைகள் அல்லது மற்ற தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றில் உதவியை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களின் உள்நோக்கம், செயல்பாடுகள் ஆகியவற்றை நன்கு அறிந்த சில ஊடகங்களும் இது பற்றி எல்லாம் எந்த கேள்வியும் எழுப்பாமல் அதை செய்தியாக வெளியிட்டு மக்கள் மத்தியில் அவர்களை புனிதர்கள்போல் காட்டும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றன. 

அதிரை பிறை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற என்ஜிஓக்களின் செய்திகளை வெளியிட மாட்டோம் என்ற விரிவான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அன்றிலிருந்து அதிரையில் என்ஜிஓக்கள் தனியாகவோ அல்லது வேறொரு அமைப்பு அல்லது நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் எந்த நிகழ்வையும் (குறிப்பாக இரத்ததான முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்) போன்றவற்றை வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. 

அதிரையில் ஒரு காலத்தில் சமூக சேவைக்காக ஏராளமான இளைஞர்கள் ஜமாத்துகளிலும், அரசியல் கட்சிகளிலும் இணைந்து பணிபுரிந்தனர். ஆனால் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக இந்த என்ஜிஓக்களின் வருகையால் அரசியல் செயல்பாடுகளில் இணைந்து பணிபுரியும் இளைஞர்கள் திசை மாறி என்ஜிஓக்களின் பின்னால் சென்று விட்டனர். அவர்கள் அரசியல் புரிதல் அற்றவர்களாகவும் பொது பிரச்சனைக்காக குரல் கொடுக்காமல் எந்த விமர்சனமும் வராத புகழ் மட்டுமே கிடைக்கக்கூடிய சில சேவைகளை பெயருக்காக செய்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

இவர்களில் சிலரை தவிர பெரும்பாலானோரை மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் காணவே முடியாது. அரசியல்வாதியோ, அதிகாரியோ சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்பவரோ தவறு செய்தால் அதை தட்டிக் கேட்கும் தைரியம் அற்றவர்களாக உள்ளார்கள். அப்படி கேட்டால் அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயம் நின்றுவிடும் என்ற அச்ச உணர்வும் அவர்களுக்கு உள்ளது. நன்மையை ஏவி தீமையை தடுப்பது நாம் பின்பற்றும் வழி. ஆனால் தீமை செய்தால் கண்டு கொள்ள மாட்டோம் நன்மையை மட்டும் செய்து புகழ் தேடுவோம் என செயல்படுபவர்களையே அதிரையின் மேடைகள் அலங்கரிக்கின்றன. கௌரவப்படுத்துகின்றன. இது போன்ற என்ஜிஓக்களிடம் அதிரை மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...