தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகத்திற்குட்பட்ட
திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2018/ 2019ஆம் ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. இந்த ரயில் தடத்தில் மீட்டர் கேஜ் பாதையில் கம்பன் விரைவு ரயில் என்ற பெயரில் தினசரி இரவு நேர விரைவு ரயில் சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயங்கி வந்தது .
அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு சென்னை எழும்பூர் காரைக்குடி தினசரி இரவு நேர விரைவு ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் ஆலத்தம்பாடி, திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி போன்ற பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகள், வர்த்தகர்கள் ,அரசு அலுவலர்கள், சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ,தினசரி இரவு நேர ரயில் இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த தடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள், ரயில் பயணிகள் ,வர்த்தகர்கள், தன்னார்வ வாய்ப்புகள் ஓய்வூதியர் சங்கங்கள், பத்திரிகைகள் போன்ற அமைப்புகள் தொடர்ந்து பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் சென்னை எழும்பூர் காரைக்குடி தினசரி இரவு நேர விரைவு ரயில் இது நாள் வரை இயக்கப்படவில்லை.
இதனால் இந்த தடத்தில் உள்ள ரயில் பயணிகள், வர்த்தகர்கள், பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலர்கள், மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக ரயில்வே நிர்வாகம் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு தினசரி இரவு விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
தற்போது சென்னை வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயில் ( வண்டி எண் 06037/06038)சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் தடத்தில் தினசரி இரவு நேர விரைவு ரயில் இயக்கப்படும் வரை, காலியாக நிற்கும் சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி சிறப்பு ரயில் பெட்டிகளை கொண்டு, சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கப்படுவது போல், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வரை வரையிலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூரை இரவு 11.30 மணிக்கு வந்தடையும் வகையிலும் வாரந்திர சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் ,வர்த்தகர்கள் இப்பகுதியில் இருந்து சென்னையில் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு உயர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மாற்று திறனாளிகள் நல சங்கத்தினர், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் இரயில்வே வாரிய தலைவர் ,சென்னை இரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.