பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை அளிக்கும் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டாலும் நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் முஸ்லிம்கள் ரமலான் மாத வழிபாடுகளை தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில் அதிரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமா என்ற கேள்வியை அதிரை பிறை சார்பில் நாம் எழுப்புகிறோம்.
ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில், தற்பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதையும் கண்டித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அதிராம்பட்டினம் நகராட்சியும் தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை பின்பற்றி அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுமா?
இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் ஊராட்சி. அங்கு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதுடன், அந்த ஊராட்சி தலைவர் வீரசேகர் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில், "CAA சட்டத்தை எதிர்த்து தீர்மானம் இயற்றிய முதல் ஊராட்சி என்ற அடிப்படையில் ஆதிரெங்கம் ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கு கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிடுகிறோம்.
1.CAA கணக்கெடுப்பு தொடர்பாக நமது ஊராட்சியில் எவரையும் அனுமதிக்க வேண்டாம்.
2.சிலிண்டர்,காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் இதர மானீயம் & சலுகை தருவதாக கூறி, தங்களின் வீடுகளுக்கு யாரேனும் வந்து தங்களுடைய ஆவணங்களை கேட்டால், ஊராட்சியின் அனுமதி கடிதம் இல்லாமல் எதையும் கொடுக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்த நிலையில் இதனை உறுதிப்படுத்துவதற்காக வீரசேகரை அதிரை பிறை சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்பொழுது 2020 ஆம் ஆண்டு கிராம சபையிலேயே சிஏஏவுக்கு எதிராக தாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், இஸ்லாமியர்களுடன் மாமன் மச்சான்களாக ஒற்றுமையாக தாங்கள் பழகி வரும் நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அவர்களுக்கு எதிராக உள்ளதால் இதனை எதிர்த்து இந்த தீர்மானத்தை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கொண்டு வந்திருப்பதாகவும், தங்களைப் பின்பற்றி இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக சுற்றுவட்டாரங்களில் உள்ள ஊராட்சிகள் தன்னிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.