Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் கிழக்கு, அதிராம்பட்டினம் மேற்கு ஆகிய நகரங்களில் அடங்கியுள்ள வார்டுகள் மற்றும் நகரக் கழகப் பொறுப்பாளர் - பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரம், அதிராம்பட்டினம் கிழக்கு, அதிராம்பட்டினம் மேற்கு ஆகிய 2 நகரக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
பிரிக்கப்பட்ட இவ்வொன்றியங்களில், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற நகரப் பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன்படி அதிராம்பட்டினம் கிழக்கு, மேற்கு ஆகிய நகரங்களின் வார்டு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிராம்பட்டினம் கிழக்கு நகரத்தில் 3, 4, 5, 14, 15, 16, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 13 வார்டுகள் அறிவிக்கப்பட்டு ராம குணசேகரன் அதிராம்பட்டினம் கிழக்கு நகர பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிராம்பட்டினம் மேற்கு நகரத்தில் 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20 ஆகிய 14 வார்டுகள் பிரிக்கப்பட்டு அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளராக அஸ்லம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம் அதிரை திமுக நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு இருப்பதுடன், பல ஆண்டுகளாக குணசேகரன் வகித்து வந்த நகர செயலாளர் பதவியையும் இழந்து இருக்கிறார். இமாம் ஷாபி விவகாரத்தில் குணசேகரன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்த நிலையில், திமுக தலைமையின் இந்த அறிவிப்பு அவரது பவரை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி துணைத் தலைவரின் ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இலை கட்சியில் கவுன்சிலராக இருந்து சூரியன் கட்சிக்கு தாவிய கவுன்சிலர் ஒருவர் திமுக வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதேபோல் ஊடகம் என சொல்லிக் கொண்டு வரும் இவர்களுக்கு ஆதரவான நபரும் சமூக வலைதளத்தில் புலம்பல் பதிவுகளை வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.