அதிராம்பட்டினம் கடற்கரை தூய்மை பணியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தார்.
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்ற வேண்டும் என்பது பலரது ஆவலாக இருந்தாலும் அது தொடர்பான போதிய முயற்சிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி முதல் கைஃபா மற்றும் அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து கடற்கரை செல்லும் பாதை மற்றும் கடற்கரை அருகே மண்டி இருந்த முட்புதர்களை அகற்றும் பணியை தொடங்கியது. 9 வது நாளாக நேற்று நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையோரம் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை அருகே இருந்த புதர்களும் அகற்றப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரை கடல் சாலையிலிருந்து தென்படத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் கடற்கரை பணியை இன்று மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் வருகை தந்து உள்ளார். அத்துடன் கடற்கரைத் தெரு குளம் சீரமைத்தல் பணிகளையும் ஆய்வு செய்த அமைச்சர் மரம் நட்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் தீனுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதன் இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் சிஷ்யா, பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.