Ads: Crescent builders - Coming Soon
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeOf4SaLXygC2h3fdV5Qsh57a_Fx8hXoT_wcYjmjwc8aFyXMEVvOXW0GGVnLjEGnpuhmc3fHS4nFciA-rtZwaQfBBJevM297etEvtj4ZfyTLC03Tm7R2ebU4GElRik76h-lDLCCNlJaHe5bzXvfLyawVcH4SGS3zux-4V4idJNJr8H-7V4yWqhluNXYQY/s16000/New%20Crescent%20builders%20gif.gif)
அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) உதவியுடன் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்ற வேண்டும் என்பது பலரது ஆவலாக இருந்தாலும் அது தொடர்பான போதிய முயற்சிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கைஃபா மற்றும் அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து கடற்கரை செல்லும் பாதை மற்றும் கடற்கரை அருகே மண்டி இருந்த முட்புதர்களை அகற்றும் பணியை தொடங்கியது. 9 வது நாளாக நேற்று நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையோரம் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை அருகே இருந்த புதர்களும் அகற்றப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரை கடல் சாலையிலிருந்து தென்படத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் கடற்கரை பணியை மார்ச் 10 ஆம் தேதி பார்வையிட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் வருகை தர உள்ளார். அத்துடன் கடற்கரைத் தெரு குளம் சீரமைத்தல் மற்றும் மரம் நடுதல் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்ய இருக்கிறார். அவருடன் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரையும் வருகை தர உள்ளார். இந்த சமயத்தில் அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு தீனுல் இஸ்லாம் சங்க இளைஞர் நற்பணி மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.