அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) உதவியுடன் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்ற வேண்டும் என்பது பலரது ஆவலாக இருந்தாலும் அது தொடர்பான போதிய முயற்சிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கைஃபா மற்றும் அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து கடற்கரை செல்லும் பாதை மற்றும் கடற்கரை அருகே மண்டி இருந்த முட்புதர்களை அகற்றும் பணியை தொடங்கியது. 4 வது நாளாக நேற்று நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையோரம் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை அருகே இருந்த புதர்களும் அகற்றப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரை கடல் சாலையிலிருந்து தென்படத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பான சிஷ்யாவும் கடற்கரையை தூய்மை செய்யும் இந்த பணியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்துடன் கைகோர்த்துள்ளது. நேற்றைய தினம் கடற்கரை தூய்மை பணியை சிஷ்யா தலைவர் முஹம்மது தம்பி, சிஷ்யா பொருளாளர் முஹம்மது சாலிஹ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கிருந்த தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினரிடம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சிஷ்யா சார்பில் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், முதற்கட்டமாக இரண்டு நாட்கள் தூய்மைப் பணிக்கான செலவை ஏற்பதாகவும் சிஷ்யா நிர்வாகிகள் உறுதியளித்தனர்.