அதிரை கடற்கரை தெருவில் உள்ள ஒரு பாதையின் நடுவே உயரமான வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்தப் பாதை வழியே வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இரவு நேரங்களில் அப்படியே நடந்து செல்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதில் சில வடிகால்கள் மூடப்படாமலும் மூடப்பட்ட சில வழிகால்களின் மூடிகள் உடைந்தும் காணப்படுகின்றன. சில மூடிகள் கால் வைத்தால் நகரும் நிலையில் பழுதடைந்து உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி வழியாக செல்வதே பெரும் சாகசமாக இருக்கிறது என மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள் வார்டு கவுன்சிலரும் நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.