அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்ற வேண்டும் என்பது பலரது ஆவலாக இருந்தாலும் அது தொடர்பான போதிய முயற்சிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி முதல் கைஃபா மற்றும் அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து கடற்கரை செல்லும் பாதை மற்றும் கடற்கரை அருகே மண்டி இருந்த முட்புதர்களை அகற்றும் பணியை தொடங்கியது. 9 வது நாளாக நேற்று நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையோரம் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை அருகே இருந்த புதர்களும் அகற்றப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரை கடல் சாலையிலிருந்து தென்படத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று ரமலான் நோன்பு நோற்ற இளைஞர்கள் அதிரை கடற்கரைக்கு சென்று இப்தார் உணவருந்தினர்.
வழக்கமாக ரமலான் மாதத்தில் ஒரு மாற்றத்திற்காக அதிரை அருகே புதுப்பட்டினம் போன்ற கடற்கரைகளுக்கு சென்று இப்தார் உணவருந்தி வந்த நமது ஊர் மக்களுக்கு அருகிலேயே அமைந்துள்ள அதிரை கடற்கரை வரப்பிரசாதமாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதை சீர்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.