
சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் வெகு சிலரை தவிர பெரும்பாலானோர் பேருந்துகளிலேயே சென்னைக்கு சென்று வருகின்றனர். இதற்காகவே அதிரை வழியாக சென்னைக்கு ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இது அல்லாமல் அரசு SETC பேருந்தும் அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதிரை - சென்னை இடையே இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வசதி இல்லாதவர்கள் இந்த SETC பேருந்தில் சென்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் அதிரையில் இருந்து SETC பேருந்து சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே அதிரை பிறை கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அஸ்லம் ஆகியோர் சந்தித்து அதிராம்பட்டினத்தில் இருந்து நேரடியாக சென்னை செல்வதற்கு அரசு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.