காவிரி கடைமடை பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் S.H.அஸ்லம். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரூர் தலைவருக்கான நேரடி தேர்தலில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் மூலம் அதிராம்பட்டினத்தில் திமுகவின் முதல் பேரூராட்சி தலைவரானார்.
2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளராக S.H.அஸ்லம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அக்கட்சியின் தலைமையகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை S.H.அஸ்லம் தாக்கல் செய்துள்ளார்.
இந்தமுறை காவிரியின் கடைமடை பகுதியிலிருந்து ஒருவருக்கு திமுக வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் அது S.H.அஸ்லமாக தான் இருக்க முடியும் என்று அக்கட்சியினர் பேசிக்கொள்கின்றனர். இவர் டி.ஆர்.பாலுவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்பமனு தாக்களுக்கு முன்பாக கூட இருவரும் சந்தித்துள்ளனர்.
இதில் மற்றொரு உட்கட்சி அரசியலும் உள்ளது. 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலு போட்டியிட்டபோது அவருக்கு எதிராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளடி வேலை பார்த்ததாக பரவலாக பேசப்பட்டது. அதிரையிலும் திமுக நகர செயலாளர் குணசேகரன் பழனிமாணிக்கம் ஆதரவாளர் என்பதால் அவரும் தனக்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி 2014 தேர்தல் வாக்குப்பதிவின்போதே டி.ஆர்.பாலு குணசேகரனை எச்சரித்தார்.
ஆனால் அப்போதைய சூழலில் டி.ஆர்.பாலுவுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை நின்று அவருக்காக S.H.அஸ்லம் தேர்தல் பணி செய்தார். இதனால் S.H.அஸ்லத்தின் மகன் திருமணத்தை நேரில் வந்து தனது தலைமையிலேயே டி.ஆர்.பாலு நடத்தி வைத்தார். தற்போது திமுக பொருளாளராகவும் மக்களவை குழு தலைவராகவும் உயர்ந்திருக்கும் டிஆர் பாலு, 10 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த தோல்வியை மனதில் வைத்து அஸ்லத்தை நிறுத்த கட்சித் தலைமையிடம் பரிந்துரைக்க வாய்ப்புகள் உள்ளதாக பேசப்படுகிறது.