அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் சீலை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த ஜனவரி 21ம் தேதி இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன.
இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர் மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்தது.
சீல் அகற்றப்பட்டாலும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பள்ளி திறக்கப்படாமல் இருந்தது. மூன்று நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இமாம் ஷாபி பழைய பள்ளி நில விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிரை பிறை சார்பில் விசாரித்தோம். அப்போது ஏற்கனவே அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேதி அறிவிக்கப்பட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் உருவாகி விடும் எனவும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கூடிய விரைவில் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.