Ads: Crescent builders - Coming Soon
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இதே போன்ற பிரச்சனை வந்தபோது சித்திக் பள்ளி நிர்வாகம் விளக்க அறிக்கை வெளியிட்டது. அதில், "அதிராம்பட்டினம் சித்தீக் பள்ளிவாசல் மற்றும் அதோடு சேர்ந்த 1.59 ஏக்கர் நிலங்கள் கடந்த 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பள்ளி கட்டப்படுவதற்கு முன் 1 ஏக்கர் 59 சென்ட் இடம் சின்னப்பள்ளி என்ற பெயரில் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பள்ளிவாசல் நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் இதை தங்கள் குடும்ப சொத்தாக கருதி, வீடுகளை கட்டியது அல்லாமல் சில நிலங்களை பிற குடும்பத்தினருக்கும் விற்றுள்ளனர். அரசு ஆவணங்கள் மற்றும் வேலூர் பாக்கியாத் மதரஸா வழங்கிய ஃபத்வாவின் அடிப்படையில் அந்த குடும்பத்தினரை பள்ளிவாசல் இடத்தைவிட்டு காலி செய்யும்படியும் வீடு கட்டியவர்களிடம் தரை வாடகை கேட்டும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்ததுடன் பள்ளிவாசலுக்கு அருகே பள்ளி பயன்பாட்டில் உள்ள இடத்தில் பள்ளிக்கு பின்னால் உள்ள தெருவுக்கு பொதுப்பாதை கேட்டு, சிலரை தூண்டி பல ஆண்டாக பிரச்சனை செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, தற்போது சென்னை வக்ஃப் தீர்ப்பாயத்தில் அது நிலுவையில் இருக்கிறது. (வழக்கு எண்: OA45/2018)
இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பள்ளிவாசல் வக்ஃபு சொத்தை அபகரிக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாததால் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களின் மூலம் பொய் செய்தி பரப்பி உள்ளனர்.
அதில் வரும் காட்சியில் திட்டமிட்டே சித்திக் பள்ளிவாசல் சார்பில் வழக்கு குறித்து வைக்கப்பட்டுள்ள பலகை மறைக்கப்பட்டுள்ளது. சித்திக் பள்ளிவாசல் பெயரை சொன்னால் தங்களுக்கு ஆதரவு கிடைக்காதோ என்று எண்ணி அதையும் சொல்லாமல் பாதை வேண்டுமென்று பேட்டி அளித்துள்ளார்கள்.
பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டு வக்ஃபு செய்த நிலத்தை எப்படி பொதுப்பாதைக்கு வழங்க முடியும்? அவர்கள் பாதை கேட்கும் தெருவில் பள்ளி வாசலுக்கு சொந்தமான இடங்களுக்கு சாலை, நகராட்சி குடிநீர் இணைப்பு குழாய் போன்றவை இல்லை. காரணம் அது பள்ளிவாசல் நிலம் என்பதால் அரசு அங்கு எதுவும் செய்யவில்லை.
ஆம்புலன்ஸ் செல்ல பாதை இல்லை என்று போராடினால் அதிராம்பட்டினத்தில் மட்டுமே 50க்கும் அதிகமான குறுகலான பாதைகள் உள்ளன. அங்கெல்லாம் என்ன செய்வார்கள்? மற்றொரு நபர் டிரான்ஸ்பார்மர் வைக்க இடமில்லை என பேட்டியளிக்கிறார். ஆம்புலன்ஸே வர முடியாத குறுகலான பாதையில் எதற்கு டிரான்ஸ்பார்மர். அப்படி வைத்தால் ஆம்னி ஆம்புலன்ஸால் கூட உள்ளே நுழைய முடியாத நிலை வருமே.
இவை எல்லாம் நிலத்தை அபகரிக்க சொல்லப்படும் காரணங்கள் மட்டுமே. மேலும் இதில் பேட்டியளித்த பெண் தன்னுடைய பெயரையே மாற்றி சொல்கிறார் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளோம். எனவே ஊடகங்களில் வெளியான செய்தி என்பது முழுக்க முழுக்க சித்திக் பள்ளியின் வக்ஃப் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என தெரிவித்துக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.