Ads: Crescent builders - Coming Soon
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பிஸ்மி மெடிக்கல் அருகே தரகர் தெருவை சேர்ந்த அஜ்மல் (வயது 72) என்ற முதியவர் மீது அதிவேகமாக கேடிஎம் பைக்கில் வந்த இளைஞர்கள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு அவரை மீட்டு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக அதிரை சேர்மன்வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட மெயின் ரோட்டில் விபத்து ஏற்பட்டு தாய், தந்தை, குழந்தை படுகாயம் அடைந்தனர்.
புதன் கிழமை காலை சுமார் 9 மணியளவில் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மறுநாள் அதிரை கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள ஹவான் உணவகம் அருகே இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிரையில் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் பிஸ்மி மெடிக்கல், காதர் முகைதீன் பள்ளி ஜாவியால் சாலை திருப்பம், கடற்கரை தெருவுக்கு திரும்பும் இடம், பிலால் நகர் வளைவு பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தடுப்புகள் வைக்க வேண்டும் எனவும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.