அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகத்தை எந்தவிதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் வந்து ஜப்தி செய்தது அதிரை மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாபியின் மீது நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளி வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, வெல்பேர் கட்சி மாநில தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் முஹம்மது கவுஸ், ஐ.எம்.எம்.கே. தலைவர் ஹைதர் அலி, எஸ்டிபிஐ கட்சி மாநில நிர்வாகி அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருப்பதுடன் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று 5 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பிரச்சாரத்தை அதிரை இளைஞர்கள் தொடங்கி உள்ளார்கள்.
#SaveImamShafi என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். மேலே உள்ள படத்தில் இருக்கும் QR கோட்டை ஸ்கேன் செய்தோ அல்லது கீழே உள்ள லிங்கை களில் செய்து ட்விட்டரில் (X) தளத்தில் ஒரே கிளிக்கில் கருத்திடலாம்.