2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் தற்பொழுது அரசியல் கட்சியில் இறங்கி விட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ், விசிக, மமக, இடதுசாரிகள் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் ஏற்கனவே காங்கிரசுக்கு வழங்கப்பட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுடன் சேர்த்து நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குள் அதிராம்பட்டினமும் வருகிறது. இந்த தொகுதியில் தற்போது மக்களவை உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த பரசுராமன் எம்பி ஆக இருந்தார். அதற்கு முன் பழனிமாணிக்கம் எம்.பி ஆக இருந்தார். இந்த நிலையில் இந்த தொகுதிக்கு காங்கிரஸ் குறி வைத்து இருப்பது பழனி மாணிக்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள், முன்னணி ஊடகங்களில் இந்த தொகுதிகளின் பட்டியல் வெளியானது. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி இதுபோன்ற பட்டியலை வெளியிடவில்லை என மறுத்து உள்ளது. ஆனால், நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களின் அடிப்படையில் காங்கிரஸ் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல் கிடைத்தது. அதையே பீட்டர் அல்போன்சிடம் நாம் கேள்வியாக முன்வைத்தோம்.