Ads: Crescent builders - Coming Soon
கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளி வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில நிர்வாகி அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருவதுடன் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணாதுரை எங்கே? என்ற கேள்வி அதிரை மக்களிடையே எழுந்துள்ளது. தேர்தல் சமயத்தில் வீதி வீதியாக, பள்ளிவாசல் பள்ளிவாசலாக சென்று வாக்குக்கு சேகரித்த எம்எல்ஏ அண்ணாதுரை இப்பொழுது எங்கு சென்றார் என்று மக்கள் கேட்கிறார்கள். ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரே அதிராம்பட்டினத்திற்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சொந்த தொகுதியான பட்டுக்கோட்டையின் எம்எல்ஏ அண்ணாதுரை இதுவரை இது தொடர்பாக எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது மக்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து போராட்ட குழுவினர் நம்மிடம் தெரிவிக்கையில், "சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களை பலமுறை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் போராட்ட களத்திற்கு இதுவரை அவர் வரவில்லை. இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை." என்று கூறுகின்றனர். கடந்த மாதம் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் சுற்றியுள்ள கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பெருந்திரளாக நகராட்சி முன் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாளே சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அந்த போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அதைவிட பெரும் தொகையிலான மக்களைக் கொண்ட அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக அண்ணாதுரை இதுவரை எதுவும் பேசாமல் மௌனம் காப்பது பாரபட்சமான செயலாக பார்க்கப்படுகிறது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் நிர்வாகம் தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரான தீர்மானங்களை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் மாவட்ட செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மிக முக்கிய அதிகாரம் படைத்த பொறுப்பில் இருக்கும் அண்ணாதுரை தனக்கு கீழ் இருக்கும் நகர செயலாளரை கூட கண்டிக்க முடியாத அளவுக்கு ஆளுமையற்றவரா? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.
பட்டுக்கோட்டை தொகுதியில் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்த சமயத்தில் அதிராம்பட்டினம் மக்கள் மட்டும் பெருந்திரளாக திமுகவுக்கு வாக்களித்து அண்ணாதுரையை வெற்றியடைய செய்தனர். பல ஆண்டுகளாக சட்டசபைக்கு செல்ல முடியாமல் இருந்த தன்னை மீண்டும் சட்டசபைக்கு செல்ல உதவிய அதிராம்பட்டினம் மக்களுக்கு அண்ணாதுரை செய்யும் கைமாறு இதுதானா என வெதும்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள் அதிராம்பட்டினத்தை நோக்கி படையெடுத்து வரும் சூழலில் சொந்த தொகுதி எம்எல்ஏவே இதுவரை இப்பகுதியை ஏறெடுத்து பார்க்காமல் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பது திமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைவதற்கு சிறுபான்மை மக்களின் பெருவாரியான வாக்குகளே முக்கிய காரணமாக இருக்கிறது.
குறிப்பாக பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் ஏற்கனவே சொன்னதைப் போல் அதிராம்பட்டினத்தின் வாக்குகளால்தான் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிராம்பட்டின மக்களின் பெருவாரியான ஆதரவின் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கமும் வெற்றி பெற்றார். ஆனால் இவ்விருவருமே இதுவரை அதிராம்பட்டினத்திற்காக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது மக்களை வேதனை அடைய செய்திருக்கிறது.
2024 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுகவின் வாக்கு வங்கிகைக்கு வேட்டு வைக்கும் வேளையில் இவர்கள் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் திமுக அனுதாபிகளையும் சூழ்ந்துள்ளது.