கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளி வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில நிர்வாகி அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருவதுடன் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மதநல்லிணக்கம் மற்றும் அமைதியோடு மக்கள் வாழும் அதிரையில் மொட்டைக் கடுதாசிபோல இரவோடு இரவாக சிறுபான்மையினர் மீது அவதூறு பரப்பும் மதவெறி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில், "இன்றைய தினம் அதிராம்பட்டினம் முழுவதும் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மத துவேசத்துடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததை குறிப்பிட்டு நோட்டிஸ் ஒட்டிய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் பைசல் அஹமத், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் J.s.சாகுல் ஹமீது, நகர அவைத் தலைவர் ஹலீல் ரஹ்மான், நகரத் துணைச் செயலாளர் அஜ்மல், நகர துணைச் செயலாளர் ராவுத்தர், இளைஞரணி செயலாளர் ரியாஸ் ஆகியோர் புகார் அளித்தனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.