பட்டுக்கோட்டை தொகுதியில் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்த சமயத்தில் அதிராம்பட்டினம் மக்கள் மட்டும் பெருந்திரளாக திமுகவுக்கு வாக்களித்து அண்ணாதுரையை வெற்றியடைய செய்தனர். பல ஆண்டுகளாக சட்டசபைக்கு செல்ல முடியாமல் இருந்த தன்னை மீண்டும் சட்டசபைக்கு செல்ல உதவிய அதிராம்பட்டினம் மக்களுக்கு அண்ணாதுரை செய்யும் கைமாறு இதுதானா என வெதும்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள் அதிராம்பட்டினத்தை நோக்கி படையெடுத்து வந்த சூழலில் சொந்த தொகுதி எம்எல்ஏவே இதுவரை இப்பகுதியை ஏறெடுத்து பார்க்காமல் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பது திமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைவதற்கு சிறுபான்மை மக்களின் பெருவாரியான வாக்குகளே முக்கிய காரணமாக இருக்கிறது.
குறிப்பாக பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் ஏற்கனவே சொன்னதைப் போல் அதிராம்பட்டினத்தின் வாக்குகளால்தான் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிராம்பட்டினம் மக்களின் பெருவாரியான ஆதரவின் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கமும் வெற்றி பெற்றார். ஆனால் இவ்விருவருமே இதுவரை அதிராம்பட்டினத்திற்காக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது மக்களை வேதனை அடைய செய்திருக்கிறது.
2024 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுகவின் வாக்கு வங்கிகைக்கு வேட்டு வைக்கும் வேளையில் இவர்கள் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் திமுக அனுதாபிகளையும் சூழ்ந்துள்ளது. திமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் வைத்த சீல்மற்றும் போராட்ட சமயத்தில் அண்ணாதுரை வராதது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த விளம்பர போஸ்டர் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.