வாக்களித்த, வரி செலுத்தும் மக்கள் நகராட்சியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். எனவே இதை ஒரு ஊடகமாக அதிரை பிறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அது அதிரை பிறையின் கடமையும் கூட. நகராட்சி நிர்வாகம் என்பது அதிரை மக்களின் நலன் சார்ந்தும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இருக்கிறது. இதற்காகவே நாம் வரி செலுத்தி வருகிறோம்.
எனவே தாங்கள் செலுத்திய வரி தொகைக்கு முறையான பணிகள் நடக்கிறதா? வார்டு பாகுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா? ஊழல் லஞ்சம் முறைகேடுகள் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் தூய்மையாக செயல்படுகிறதா? என்பதை அறிந்து மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறோம்.
அதன் அடிப்படையில் தான் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் நாய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தாமல் தவறவிட்டது, சாலை வடிகால் பிரச்சினைகள் சுகாதார பிரச்சனைகளில் போதிய கவனம் செலுத்தாதது, அதிரையில் பூர்வகுடி மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் உற்றுவட்டார கிராமங்களை அதிரையோடு இணைப்பது, முறையாக அறிவிப்பு செய்யாமல் கடைகளை ஏலம் விட்டது, மெயின் ரோடு சாலையை மில்லிங் செய்யாமல் உயரமாக போடும்போது கண்டுகொள்ளாமல் இருந்தது, நாய்களை பிடிப்பதற்கு இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதை இன்னும் செலவு செய்தார்களா? இல்லையா? என்று மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது, அதிரை நகராட்சி அர்டா நில விவகாரத்திற்கு வழக்கறிஞர் செலவாக 3 லட்சம் ரூபாய் ஒதுக்கியது, இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி முன்கூட்டியே தவறான தேதியில் நோட்டீஸ் ஒட்டியது, கேவியெட் மனுக்காக மட்டும் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கியது, வார்டு உட்கட்சி பூசல், கவுன்சிலருடனான மோதலால் அவரது வார்டையே புறக்கணிப்பது, நகராட்சியில் எடுக்கப்படும் தீர்மானங்களை உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைப்பது போன்றவற்றை அதிரை பிறை விமர்சித்து செய்திகளை வெளியிட்டது.
அதிரை பிறை வெளியிட்ட இது போன்ற செய்திகள் யாவும் மக்கள் நலன் சார்ந்தது மட்டுமே தவிர எந்த ஒரு அரசியல்வாதியை எதிர்க்க வேண்டும் என்றோ அல்லது ஒரு அரசியல்வாதியை ஆதரிக்க வேண்டும் என்றோ இல்லை என்பதை அதிரை பிறையை 12 ஆண்டுகளாக பின்பற்றி வரும் வாசகர்கள் அறிவார்கள். இப்படி இருக்கும் நிலையில் நமது குற்றச்சாட்டுகள் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாத நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்புடைய சிலரும் நகராட்சி கவுன்சிலரும் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் அதிரை பிறை என்பது அதிராம்பட்டினத்தின் அனைத்து பகுதிகளுக்கான ஊடகமாகும். அனைத்து பகுதிகளின் செய்திகளையும் நாம் வெளியிட்டு வருகிறோம். அனைத்து பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் சார்ந்து குரல் எழுப்பி வருகிறோம். பல்வேறு பகுதிகளில் அதிரை பிறைக்கு என செய்தியாளர்கள் உள்ளார்கள். எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு பகுதியையோ, எந்த ஒரு தரப்புக்கு சார்பாகவோ, எதிராகவோ நாம் பாரபட்சத்தோடு செய்திகளை வெளியிட்டது இல்லை. சொல்லப்போனால் அதிரையில் உள்ள பகுதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை முதன் முதலில் உடைத்து பேசிய ஊடகம் அதிரை பிறை. அதிராம்பட்டினத்தை சேர்ந்த அனைத்து மக்களும் சமத்துவமாக இருக்க வேண்டும், ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என அதிரை பிறை பலமுறை கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் நம் மீதே தெரு ரீதியாகவும் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த ஊடகம் எனவும் சாயத்தை பூசி தங்களுடைய குறைகளை மறைக்க முயற்சி செய்கிறார்கள். பல்வேறு தரப்பினரிடம் சென்று அதிரை பிறை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறுகளையும், பகுதி ரீதியான முத்திரைகளையும் குத்தி வருகிறார்கள். மறைமுக மிரட்டல்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். தற்பொழுது உள்ள நகராட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து எப்படி நாம் செய்திகளை வெளியிட்டோமோ அதே போன்று இதற்கு முன் இருந்த பேரூராட்சி நிர்வாகத்தையும் பல முறை விமர்சித்து துணிவோடு செய்திகளை வெளியிட்டு இருக்கிறது அதிரை பிறை.
நிலைமை இப்படி இருக்க தங்களின் இயலாமையை, தங்களின் மோசடியை, தங்களின் அறியாமையை வெளியுலகுக்கும் மக்களுக்கும் அம்பலப்படுத்தி வரும் அதிரை பிறையை எதிர்கொள்ள துணிவின்றி திசை திருப்பும் வகையில் இதுபோன்ற பிரித்தாலும் சூழ்ச்சிகளை குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் செய்து வருகிறார்கள்.
எப்படி ஆங்கிலேயர்கள் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தார்களோ, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் எப்படி மத ரீதியாக இந்தியாவில் பிரித்தாலும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்களோ, எப்படி சாதி ரீதியாக பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து வருகிறார்களோ, அதேபோல் அதிராம்பட்டினத்தில் பகுதி வாரியாக பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து தங்களின் ஆட்சி அதிகாரத்தை பதவியை தக்க வைக்கும் இழிவான காரியத்தில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கூட ஒரு கவுன்சிலர் குறிப்பிட்ட பகுதியினர் என்று குறிப்பிட்டு வெறுப்பை பரப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு இருந்தார். பொதுவான பிரச்சனை தொடர்பாக ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் போது அதற்கு பதிலளிக்காமல், அதன்மூலம் திருந்துவோம் என்று நினைக்காமல், தொடர்ந்து மோசடிகளை செய்வதற்காக மக்களை பிரித்து ஏமாற்றும் காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மனிதர்கள் இரண்டு வகைதான். ஒன்று நல்லவர், இன்னொன்று கெட்டவர். அதிரை மக்கள் எப்பொழுதும் நல்லவர்களின் பக்கம் துணை நிற்பவர்கள் என்பதை நாம் அறிவோம். எனவே தெரு, பகுதி, கட்சி என்று பிரிந்து செல்லாமல் ஓரணியில் நல்லவர்களுடன் துணை நிற்போம். அதிரையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வோம்.