சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடரில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக தேர்வாகி சிறப்பாக விளையாடி வருகிறார்கள் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இருவர்.
அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த ஹாஜா முஹைதீன் அவர்களின் மகன் முஹம்மது ஹாசிம் மற்றும் மேலத்தெருவை சேர்ந்த தாஜுத்தீன் அவர்களின் மகன் அக்மல் ஆகிய இருவரும் காதிர் முகைதீன் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்கள். சிறந்த கால்பந்து வீரர்களான இவ்விருவரும் 50 க்கும் அதிகமான கல்லூரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக தேர்வாகினர்.
அதுமட்டுமின்றி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் அதிரை பழஞ்செட்டித் தெருவை சேர்ந்த முஹம்மது ஆதிஃப் என்ற மாணவரும் இந்த அணிக்கு தேர்வாகினார்.
தற்போது சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடர்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நமதூர் வீரர்களை உள்ளடக்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று அண்ணா பல்கலைக்கழகம் - பாரதிதாசன் பல்கலைக்கழகம் இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை மீண்டும் இரு அணிகளிடையே போட்டி நடைபெற்றது.
இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணியில் கல்லூரிக்கு ஒரு மாணவர் கூட தேர்வாவது கடினம். ஆனால், நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இருவர், ஜமால் முஹம்மது கல்லூரியில் பயிலும் நமதூர் மாணவர் ஒருவர் அதில் தேர்வாகி அசத்தி இருக்கிறார்கள்.