அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 24 கடைகள் பல மாதங்களாக ஏலம் விடப்படாமல் கிடந்தன. இந்த நிலையில் முறையான முன்னறிவிப்பு இன்றி கடந்த டிசம்பர் 7ம் தேதி மாலை அதிரை நகராட்சி கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படுவதாக அதிரை பிறைக்கு தகவல் கிடைத்தது.
திமுக கவுன்சிலர்கள் சிலரும் ஏலம் விடுவது தெரியாது என கைவிரித்தனர். இந்த நிலையில் அன்று மதியம் கடைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், ஆளும் தரப்பினர் தங்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு கடைகளை வழங்கிவிட்டதாகவும், அவர்கள் உள் வாடகைக்கு கடைகளை விடப்போவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று நகர சபை கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை கவுன்சிலர்களுக்கு அவசர அழைப்பாக ஒரு கடிதம் சென்றுள்ளது. அதில் இன்று நகர சபை கூட்டம் முடிந்தவுடன் கடைகள் ஏலம் தொடர்பாக சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறப்புக் கூட்டம் மாலை கூடியது.
அதில் அதிமுக கவுன்சிலர் நான்சி பிச்சை எழுந்து முறையாக மக்களுக்கு தெரியப்படுத்தி கடைகளை ஏலம் விடுமாறு வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் ஏற்காததால் அவரும், 27 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சேதுராமன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.