இந்த நிலையில், ரேசன் அட்டை திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.50 முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளனர். இதற்கு அருகில் உள்ள டிடிபி அலுவலகத்திற்கு சென்று மாற்றி இருப்போம்.. ஆட்டோ செலவாவது மிச்சமாகி இருக்கும் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாம் நகராட்சி கவுன்சிலர்களிடம் விசாரித்தபோது தனியார் இ சேவை மையத்தினர் முகாமுக்கு வந்து இந்த பணிகளை செய்து கொடுப்பதற்காகவே கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு மற்றும் நகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் நடைபெறும் முகாம் என்பதால் இலவச சேவை என்றே மக்கள் நம்பி வந்துள்ளனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டையில் விசாரித்தபோது அங்கு எந்த சேவைக்கும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.