அதிரை ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசிய கவுன்சிலர் மைதீனுக்கு அதிரை பத்திரிகையாளர் பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "அதிரையில் இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தை நகராட்சி நிர்வாகம் கைப்பற்ற முடிவு செய்துள்ளது தொடர்பாக நேற்று அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை பிறை ஆகிய இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் நீதிமன்ற தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளதை குறிப்பிட்டு, அதை செயல்படுத்தும் விதத்தில் நகராட்சி நிர்வாகம் சட்ட நடைமுறைகளை மீறும் வகையில் இன்றே கைப்பற்ற இருப்பதாகவும், இதனால் அங்கு பாடம் பயின்று வரும் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த ஊடகங்கள் குறிப்பிட்டு இருந்தன.
இந்த நிலையில் இந்த செய்தியை வெளியிட்டதற்காக திமுக கவுன்சிலர் மைதீன் என்பவர் வாட்ஸ் அப்பில் இந்த ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி இருக்கிறார். மாணவிகள் நலன் கருதி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது அவதூறாகவும், செய்திகளில் உள்நோக்கம் கற்பிக்கும் விதத்திலும் பேசி இருக்கிறார். அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை, மக்கள் நலன் சார்ந்து வெளியிடுவது ஊடகங்களின் கடமை. அவ்வாறு செய்யும் ஊடகங்கள் மீது கலங்கம் கற்பிப்பதும் மிரட்டல் விடுப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது.
மூத்த பத்திரிகையாளரும், ஊடகங்களுடன் நல்லுறவை பேணியவருமான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியில் இருந்துகொண்டு ஜனநாயகத்தின் 4 வது தூணாக இருக்கும் ஊடகங்களை அச்சுறுத்துவது அதிரை நகர திமுகவின் வாடிக்கையாக உள்ளது. அதை மீண்டும் ஒரு முறை செய்திருக்கிறது. ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசிய கவுன்சிலர் மைதீன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரை பத்திரிகை பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.