அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 24 கடைகள் பல மாதங்களாக ஏலம் விடப்படாமல் கிடந்தன. இந்த நிலையில் முறையான முன்னறிவிப்பு இன்றி கடந்த டிசம்பர் 7ம் தேதி மாலை அதிரை நகராட்சி கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படுவதாக அதிரை பிறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் செல்போனில் விசாரித்தபோது, தினகரன் என்ற நாளிதழில் 15 நாட்களுக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார். எந்த தேதியில் நடைபெறுகிறது என்று விசாரித்தபோது அழைப்பை அவர் துண்டித்துவிட்டார்.
திமுக கவுன்சிலர்கள் சிலரும் ஏலம் விடுவது தெரியாது என கைவிரித்தனர். இந்த நிலையில் அன்று மதியம் கடைகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஆளும் தரப்பினர் தங்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு கடைகளை வழங்கிவிட்டதாகவும், அவர்கள் உள் வாடகைக்கு கடைகளை விடப்போவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று நகர சபை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று மாலை கவுன்சிலர்களுக்கு அவசர அழைப்பாக ஒரு கடிதம் சென்றுள்ளது. அதில் இன்று நகர சபை கூட்டம் முடிந்தவுடன் கடைகள் ஏலம் தொடர்பாக சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நகலில் நகராட்சி குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, " ஒன்பது வருடத்திற்கு இந்நகராட்சிக்கு சொந்தமானதும் பாத்தியபபட்டதுமான பேருந்து நிலையத்தில் உள்ள A01 முதல் A15 வரை ECR சாலை பகுதி கடைகளுக்கும் மற்றும் B01 முதல் B10 வரை மார்க்கெட் சாலை பகுதி கடைகளுக்கும் 7.12.2023 தேதியன்று ஒயந்தப்பள்ளி ஏலம் கோரப்பட்டது.
அவ்வாறு ஒப்பந்தப்புள்ளி ஏலம் கோரப்பட்டதில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்கு கிழக்கண்டவாறு ஒப்பந்தப்புள்ளி வரப்பெற்றுள்ளது. ஏலத்தில் எவரும் கலந்து கொள்ளவில்லை." என்று குறிப்பிட்டு கடைகள் ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது அடுத்த பதிவில் வெளியிடப்படும்.
இவ்வளவு பெரிய ஊரில் கடைகள் ஏலம் தொடர்பாக மக்களுக்கு, வியாபாரிகளுக்கு முறையாக தெரியப்படுத்தாமல் தற்போது ஏலம் எடுக்க எவரும் வரவில்லை என்று சொல்வது வியப்பாக உள்ளது. இவையெல்லாம் திட்டமிட்டு யாரும் ஏலம் எடுக்க வந்துவிடக்கூடாது என்று உள்நோக்கத்துடன் செய்ததாகவே தெரிகிறது.