திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை எழும்பூருக்கு காரைக்குடி ராமேஸ்வரம் பகுதியில் இருந்து தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.
திருவாரூர் காரைக்குடி இடையே இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிற ரயிலுக்கு இணையாக காரைக்குடியில் காலை 8 மணிக்கு கிளம்பி மயிலாடுதுறைக்கு 12 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையில் ஒரு மணிக்கு கிளம்பி காரைக்குடிக்கு 5 மணிக்கு செல்லும் வகையில் பட்டுக்கோட்டை வழியாக ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக டிஆர்எம் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் தற்பொழுது இயக்கப்பட்டு வரும் திருநெல்வேலி சென்னை எழும்பூர் (06069/06070) வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சபரிமலை பக்தர்களுக்காக காரைக்குடி வரை இயக்கப்படும் எர்ணாகுளம் காரைக்குடி சிறப்பு ரயிலை பட்டுக்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களுக்காக பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 10,000 பக்தர்கள் குறிப்பாக பெண்கள் இருமுடி அணிந்து தைப்பூசத்தை முன்னிட்டு டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி வரை பயணம் செய்ய உள்ளார்கள். அவர்கள் வசதிக்காக இப்பகுதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும். முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகளை அடையாளம் காட்டும் டிஜிட்டல் குறியீடுகளை அமைக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் ரன்னிங் ரூம் அமைத்து திருச்சி பட்டுக்கோட்டையிடையே டெமோ ரயில் இயக்க வேண்டும், மன்னார்குடி பட்டுக்கோட்டை தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புதிய ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கோரிக்கைகள் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.
விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் தெரிவித்தார்கள் பட்டுக்கோட்டையில் பயணிகள் காத்திருப்பு அறை சரி செய்து கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் என்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ரயில்வே முன் பதிவு மையம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இயங்க வேண்டும் என்றும் இப்பொழுது இயக்கப்படுகிற தினசரி திருவாரூர் காரைக்குடி ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிராம்பட்டினம் பேராவூரணி முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் இவ்வழியாக இயக்கப்படக்கூடிய அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.