அதிரையுடன் கிராமங்கள் இணைப்பு.. பின்னணியில் ரியல் எஸ்டேட் லாபம்தான் காரணமா? பகீர் தகவல்
personEditorial
November 08, 2023
0
share
அதிரையுடன் கிராமங்கள் இணைப்பதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் லாபம் காரணமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்து உள்ளது.
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் அதிரை நகர சபை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிரையோடு புதிதாக கிராமங்களை இணைப்பதை எதிர்த்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, மற்றும் பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் நகராட்சிக்கு நேரில் சென்று ஆணையரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் மாலை கூட்டம் கூடிய நிலையில், 7 கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நகர துணைத் தலைவர் குணசேகரனோ 3 கிராமங்களையும் முழுமையாக இணைக்கப்போவது இல்லை என்றும், குறிப்பிட்ட பகுதிகளையே இணைக்கப்போவதாகவும் விளக்கம் அளித்து உள்ளார். பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிரை மக்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்களை நகராட்சி நிர்வாகம் தெரிவித்தாலும், இதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் லாபம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆம், அதிரையுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களின் மனைகள் விற்பனைக்கு இருப்பதாகவும், அதிராம்பட்டினம் நகராட்சியுடன் அதை இணைக்கும் பட்சத்தில் அவற்றின் விலை பன்மடங்கு உயரும் என்பதாலேயே இந்த கிராமங்களை தேர்வு செய்து உள்ளதாக கூறுகிறார்கள். அதிராம்பட்டினத்தின் சாலைகளையே சீரமைக்க முடியாமல் நிதியின் மீது பழிபோடுபவர்களா, 3 கிராமங்களையும் மேம்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.