அதிரை மேலத்தெரு சாணாவயல் பகுதியில் மோசமான சாலையின் காரணமாக மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
சாணாவயல் பிஸ்மி பாத்திரக் கடை எதிர்புறம் ஃபாத்திமா பள்ளிக்கு செல்லும் சாலையின் நிலைதான் இது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை கொண்ட பாதை முழுவதும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள், தொழுகைக்கு செல்பவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஜனாசாவை கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளோம் என வருந்துகிறார் அப்பகுதிவாசி. சாலையில் தேங்கி கிடக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இங்கு ஒரு பகுதி அதிராம்பட்டினம் நகராட்சி கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு கட்டுப்பாட்டிலும் வருகிறது. ஆனால், பெரும்பாலான மக்களின் வாக்குகள் அதிராம்பட்டினத்தில்தான் உள்ளன.
எனவே போர்க்கால நடவடிக்கையாக இங்கு தேங்கிய நீரை வெளியேற்றி, மேலும் நீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை எடுப்பதுடன், மழை நின்றபிறகு தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.