மறுபக்கம் அப்பகுதி பெண்கள் 2வது வார்டு கவுன்சிலர் சித்தி ஆயிஷா அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த திங்கட்கிழமை 2வது வார்டு மக்கள் வேன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரளாக சென்று ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர். மக்களின் தேவைகளை விரிவாக கேட்ட ஆட்சியர் உடனே நகராட்சி ஆணையருக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அங்கிருந்த நகராட்சி அதிகாரியை அழைத்து இந்த அடிப்படை தேவைகளை கூடவா இன்னும் செய்யவில்லை என கடிந்துகொண்டார். அவரிடம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், நேரில் வந்து ஆய்வு செய்வதாக மக்களிடம் உறுதியளித்தார். அதேபோல் RDMAவிடமும் மக்கள் புகாரளித்தனர். அப்போது அங்கிருந்த அதிரை நகராட்சி ஆணையரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
ஆட்சியரிடம் புகாரளிக்க சென்ற அந்த தினத்திலேயே நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் அங்கு வந்து சி.எம்.பி. லேன், புதுமனைத் தெரு சாலை இறக்கத்தில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் ரெடி மிக்ஸ் கொட்டினார். நேற்றும் தண்ணீர் தேங்கும் மற்றொரு பகுதியிலும் இதேபோல் ரெடி மிக்ஸ் கொட்டினர். ஆனால், சில நாட்கள் மட்டுமே அது தாக்குபிடிக்கும் என்று கூறும் மக்கள், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.