அதிரை கவுன்சிலர்களே.. அமைச்சரையே ஆட்டம் காண வைத்த திமுக கவுன்சிலர்களின் கதை! உங்க பவரை உணருங்க

Editorial
0

கோப்பு படம்: இதில் உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு இந்த செய்தி எழுதப்படவில்லை.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே மஸ்தான் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது 7ஆவது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் புனிதா, தனது வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்திருந்தார்.

நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. முதல்வர் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நகர்மன்றம் செயல்படுகிறது.

இதனால் நாங்கள் எங்கள் ராஜினாமா கடிதத்தை 13 பேரும் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்க போகிறோம் என கூறினர். இதையடுத்து அவர்கள் ராஜினாமா கடிதத்தை உயர்த்தி காட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் நாங்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்று 18 மாதங்கள் ஆகின்றன. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானை கேளுங்கள் என்கிறார்கள். இவருடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த விவகாரம் திமுக தலைமையையே உலுக்கியதை அடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார். விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த மஸ்தானின் மகன் கே.எஸ்.எம். மொக்தியார் அலி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார். செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவிக்கும் பிரச்சனை ஏற்படலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதே நிலையை அதிரையில் பொருத்திப்பார்க்கலாம். திமுக தலைமையின் உத்தரவை மீறி நகராட்சி துணைத் தலைவர் பதவியை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுக நகர செயலாளரே ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் நகராட்சி மீது வந்தவகையில் உள்ளன. சாலை, வடிகால் பணிகள், நலத்திட்டங்கள் போன்றவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், டெண்டர் பிரச்சனை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

முன் கூட்டியே வரி வசூலிக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் கூட வெளியிடப்படாத நிலை தொடர்கிறது. திமுக கவுன்சிலர்களே இதை சொல்லி ஆதங்கப்படுகிறார்கள். திமுக மாவட்ட பொருளாளரே நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக அதிரையில் மக்களுக்காக மருத்துவமனை அமைக்க அர்டா வாங்கிய நில விவகாரத்தில் நகராட்சி தலையிடுவது வழக்கு தொடர்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், நகராட்சி நிர்வாகம் கொண்டு வரும் எந்த தீர்மானத்தையும் எதிர்காமல் கவுன்சிலர்கள் ஓகே சொல்லிவிடுவதாகவும், இன்ன பிற விவகாரங்களிலும் நகராட்சியின் நடவடிக்கை எதையுமே தட்டிக்கேட்காமல் கவுன்சிலர்கள் இருப்பதாகவும் சக கவுன்சிலர்களே நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

திண்டிவனம் நகராட்சியில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டு (ராஜினாமா செய்யவில்லை) அமைச்சரை ஆட்டம் காண வைத்திருக்கும் நிலையில், நமதூர் கவுன்சிலர்கள் தவறு என உணர்ந்தும் கட்சியில் பதவி போய்விடுமோ, நமது வார்டையும் ஓரம் கட்டிவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அமைதியாக இருக்கிறார்கள். உங்கள் பலம் உங்களுக்கு வாக்களித்த மக்கள்தான். அவர்கள் சொல்வதை கேட்டு உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றிய முடிவை எடுங்கள். மக்களால் கைவிடப்பட்டு கட்சிப் பொறுப்பில் மட்டும் இருந்து எந்த பயனும் இல்லை.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...