அதிராம்பட்டினம்: ஆய்வுப் பணிக்காக வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் நிற்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருச்சி சந்திப்பிலிருந்து சிறப்பு ஆய்வு ரயில் பெட்டியில் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி, அதிராம்பட்டினம் ரயில் நிலையங்களை ஆய்வு செய்துவிட்டு மதியம் 3 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டாக்டர் செந்தில்குமார் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் வந்திருந்தார்கள்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் கோட்ட ரயில்வே மேலாளர் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சிக்னல் பிரிவு, எலக்ட்ரிக்கல் பிரிவு, பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ரயில் பாதைகளை ஆய்வு செய்தார் .
மேலும் தீயணைப்பு சாதனங்கள் முறையாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார். அவரிடம், "ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பயண சீட்டு முன்பதிவு மையத்தை மீண்டும் இயக்க வேண்டும் .
கம்பன் விரைவு ரயிலுக்கு பதிலாக தாம்பரம் ராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு ரயில், சோழன் அதிவிரைவு ரயிலுக்கு மயிலாடுதுறையில் இணைப்பு ரயிலாக காரைக்குடி மயிலாடுதுறை ரயிலை இயக்க வேண்டும்.
திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் தடத்தில் இயங்கி வரும் பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும். அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் நிற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அவர்களிடம், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.