அதிரையில் நாள்தோறும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்ந்து வருகிறது. மின் நிலையத்தை 110Kv ஆக தரம் உயர்த்தும் பணிகளுக்கு க்கிடையே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மின் தடை செய்யப்படுகிறது.
கோடை காலத்துக்கு இணையாக தற்போது வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் மின் வெட்டு கூடுதல் தலைவலியாக மாறி உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகவே அதிராம்பட்டினத்தில் இரவு நேர மின் தடை தொடர்கிறது.
அதிரையில் நேற்று இரவு 8-9 மணியில் இருந்தே பல இடங்களில் மின் தடையும், குறைந்த மின்சாரமும் வழங்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் அதிரை பிறை ஆசிரியர் தமிழ்நாடு மின்வாரியத்தை ட்விட்டரில் டேக் செய்து புகார் அளித்திருந்தார்.
அதில், "புதன் கிழமை முழு நாள் மின் தடை செய்வதாக அறிவித்து உள்ளார்கள். இன்றே அதற்கான ஒத்திகையை தொடங்கியதுபோல் பல முறை மின்வெட்டு. தினமும் பல முறை பவர் போகிறது. LOW கரண்ட் காரணமாக மின் கருவிகள் பழுதடைகின்றன. அதற்கான இழப்பீட்டை @TANGEDCO_Offcl வழங்குமா? இடம்: அதிராம்பட்டினம், தஞ்சாவூர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின் வாரியம், "புகார் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தங்களுக்கு கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளது.