இந்த காரணங்கள் அல்லாமல் நாள்தோறும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் முதல் அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடை அதிகரித்து உள்ளது. அதிரை மின் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. இதற்கிடையே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மின் தடை செய்யப்படுகிறது.
தற்போது கோடை காலத்துக்கு இணையாக வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் மின் வெட்டு கூடுதல் தலைவலியாக மாறி உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாகவே அதிராம்பட்டினத்தில் இரவு நேர மின் தடை தொடர்கிறது. அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியில் உள்ள ஒரு லைனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
அப்போது டிரான்ஸ்பார்மரில் பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அதிரையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு, குறைந்த மின்சார பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால், வியர்வையில் தூக்கம் தொலைத்ததாக மக்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.
குறிப்பாக ஆதம் நகர், கடற்கரைத் தெரு, ஜேஜே லேன், ஹாஜி ஆர்.என்.கனி அப்பா தெரு, மிலாரிக்காடு மர்யம் பள்ளி தெரு, திலகர் தெரு, புதுத்தெரு தென்புறம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த அதிரை பிறை நேயர்கள் தங்கள் பகுதிகளில் குறைந்த மின்சாரம், மின் தடை பிரச்சனைகள் இரவு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் மின் பழுதை காரணம் சொல்கிறது மின்சார வாரியம். அப்படியென்றால் மாதந்தோறும் பழுது நீக்கத்துக்காக தடை செய்யப்படும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு காரணம் மின்சார வாரியத்தின் அலட்சியமா? அல்லது பழைய கருவிகளா? என்ற கேள்வி எழுகிறது.