அதிரையில் திரும்பும் இருண்ட காலம்.. இயல்பாகி வரும் கந்தூரி ஷிர்க்! மாறும் மக்களும் மீடியாக்களும்

Editorial
0
அதிரையில் ஒரு காலத்தில் கந்தூரி என்றாலே ஊர் முழுவதும் பெருநாள் போல கொண்டாட்டமாக இருக்கும். அனைத்து தெரு மக்களும் கந்தூரியின் கொடிமரம், சந்தனக்கூடு, கச்சேரி போன்ற நிகழ்வுகளுக்கு குழந்தைகள், குடும்பத்துடன் சென்று இரவு முழுவதும் அங்கேயே கழித்துவிட்டு வந்தார்கள். இது அல்லாமல் கோட்டைப்பட்டினம், நாகூர், முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் நடக்கும் கந்தூரிகளுக்கும் சென்று வந்தார்கள்.

ஏதாவது நல்லது கெட்டது என்றால் தர்காவை நோக்கி செல்லும் கூட்டமும் அதிகம் இருந்தது. 2000ங்களின் நடுப்பகுதியில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள், தாருத் தவ்ஹீத், தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் கடுமையான மார்க்க உபதேசங்கள், களப்பணிகளின் காரணமாக அதிரையில் கந்தூரி வழக்கம் என்பது படிப்படியாக குறைந்தது.

2010 க்கு பிறகு கந்தூரி நிகழ்வுகள் பொழிவிழந்தன. கூடுகளின் எண்ணிக்கை குறைந்தன. கூடுகள் ஊர்வகமாக எடுத்து வரப்படும் வீதிகளின் எண்ணிக்கையும் குறைந்தன. இப்படியே அடுத்தடுத்த ஆண்டுகளில் கந்தூரி நிகழ்வுகளின் கலந்துகொள்ளும் மக்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் எல்லாம் கந்தூரி நடக்குமா என சந்தேகப்படும் அளவுக்கு சென்றது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக அதிரையில் மீண்டும் கந்தூரி போன்ற நிகழ்வுகள் மீதான மோகம் அதிகரித்து உள்ளது. மக்கள் கூட்டமும் முன்பு போல அதிகரித்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த தவ்ஹீத்வாதிகள்.

10 ஆண்டுகளுக்கு முன் கூடு ஊர்வலம் வந்தால் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் கூட தற்போது வேடிக்கைக்காக வெளியில் வந்து நிற்பதை பார்க்க முடிகிறது. வேடிக்கை என்று சொல்லி கந்தூரி திடலுக்கும், கச்சேரிக்கும் போகிறார்கள். கோட்டைப்பட்டினம், முத்துப்பேட்டை, நாகூர் கந்தூரிகளுக்கு படையெடுக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "தர்ஹா மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் வேடிக்கைக்காக அங்கு செல்கிறொம். வான வேடிக்கையை பார்க்க போகிறோம்." என்கிறார்கள். ஆனால், தர்காவை மையப்படுத்தி நடக்கும் சடங்குதானே கந்தூரி? தர்ஹாவை ஷிர்க் என்று நம்புபவர்கள், கந்தூரியையும் அவ்வாறாக தானே பார்க்க வேண்டும்? அங்கு செல்வதன் மூலம் அந்த சடங்கின் ஒரு பகுதியாகதானே நாமும் இருக்கிறோம்.

இதுகுறித்த போதிய விவரம் இருந்தும் தங்களை தாங்களே சமாதானம் செய்துகொண்டு அங்கு சென்று கேளிக்கை, அனாச்சாரங்களுக்கு துணை போகின்றனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால் கந்தூரி, தர்ஹா போன்ற ஷிர்க்குகளுக்கு எதிராக விழிப்புணர்வு பதிவுகளை எழுதி வந்த உள்ளூர் மீடியாக்களே கந்தூரி நிகழ்வை லைவ் செய்வது, செய்தியாக வெளியிடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

நிகழ்வுகளை வெளியிடுவது ஊடகத்தின் உரிமை என்றாலும், சமூக பொறுப்பும், மார்க்க சிந்தனையும் அதிரை போன்ற ஊர்களுக்கென பிரத்யேகமாக இயங்கும் ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அவசியமாகும். இதுபோன்ற செய்திகளை பார்த்து மேலும் பலர் ஷிர்க்கை நோக்கி செல்ல நேரிடும்.

இதற்கு முக்கிய காரணம் முந்தைய 10 ஆண்டுகளில் இருந்த தவ்ஹீத் பிடிமானம் அடுத்த தற்போது குறைந்துவிட்டதோ என்ற கவலை மேலோங்குகிறது. கந்தூரி போன்ற நிகழ்வுகள் படிப்படியாக குறைந்த வந்ததால், அதற்கு எதிரான உலமாக்கள், தவ்ஹீத் அமைப்புகளின் பிரச்சாரங்களும் முன்பை போல் வீரியமாக இல்லாமல் குறைந்து விட்டதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

எனவே முன்பை விட பல மடங்கு வீரியத்துடன் தர்ஹா, கந்தூரி அதையொட்டி நடக்கும் ஷிர்க் போன்ற அனாச்சாரங்களுக்கு எதிராக உலமாக்கள், தவ்ஹீத் அமைப்புகள் மார்க்க பிரச்சாரங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...