அதிரையின் வியப்பூட்டும் வரலாறும் வளர்ச்சியும்.. 2K கிட்ஸ் அறிய வேண்டிய நமதூரின் டேட்டா!

Editorial
0
அதிராம்பட்டினம் நஞ்சையும் புஞ்சையும் கொண்ட தஞ்சை மாவட்டத்தின் கடலோர நகரமாகும். மேற்கே வயலும், கிழக்கே வங்காள விரிகுடா கடலையும் எல்லையாக கொண்டு ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு நகராட்சிகள் உள்ளன. ஒன்று பட்டுக்கோட்டை மற்றொன்று அதிராம்பட்டினம். 

இதன் மொத்த பரப்பு 1013.77 ஹெக்டேர் ஆகும். மொத்த மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 33558. தற்போது ஏறத்தாழ 45000 க்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்த நகரம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

சோழர்கள், பாண்டியர்கள், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சியின் கீழ் அதிராம்பட்டினம் இருந்திருக்கிறது. அதற்கான வரலாற்று எச்சங்களை அதிரம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் காண முடியும். கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் அதிராம்பட்டினத்தின் பெயர் வீரசோழன்பட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டாக கருதப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வங்காள விரிகுடாவின் மிக முக்கியமான துறைமுகம் ஒன்றும் அதிராம்பட்டினத்தில் செயல்பட்டிருக்கிறது. இது வாணிப தளமாகவும் திகழ்ந்திருப்பது கல்வெட்டுகளின் மூலமாக அறியமுடிகிறது.

அரேபியர்கள் அதிராம்பட்டினம் துறைமுகத்துடன் வர்த்க தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். தற்போதும் அதிராம்பட்டினத்திற்கு அருகே உள்ள மல்லிப்பட்டினம் துறைமுகம் நாகை ராமேஸ்வரம் இடையே மிக முக்கியமான மீன்பிடி துறைமுகமாக திகழ்கிறது.

கடந்த 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட சட்டமன்ற தொகுதியாக இருந்து உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். வெங்கட்ராமன் பிரஜா சோசியலிச கட்சியை சேர்ந்த ஏ.ஆர். மாரிமுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தண்டாயுதபாணி பிள்ளை ஆகியோர் முறையே இந்த தேர்தல்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். 

அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகமுக்கிய தொழிலாக இருப்பது தென்னை விவசாயம், இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அண்டை கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்புகள் உள்ளன. உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

கொப்பரை தேங்காய்களும், எண்ணெய் உற்பத்திக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இது அல்லாமல் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தியும் அதிகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்தப்படியாக நகரின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தல் உள்ளது. மிகப்பெரிய அளவில் உப்பு உற்பத்தியும் நடைபெறுகிறது.

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்களில் பலர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலமாக அந்நிய செலாவணி வருவாய் கிடைக்கிறது. கட்டிட தொழிலும் இப்பகுதியில் சிறந்து விளங்குகிறது. பட்டுக்கோட்டையைவிட அதிகமான சூப்பர் மார்க்கெட்டுகள் அதிராம்பட்டினத்தில் உள்ளன.

அதிராம்பட்டினத்தில் துறைமுகம் இருந்த காலம் தொட்டே ஏற்றுமதி, இறக்குமதிக்கு பெயர்போன ஊராக இருந்து வந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொருட்களை வாங்குவதற்காகவும் இதர தேவைக்களுக்காகவும் அதிராம்பட்டினம் நகரையே நம்பியுள்ளனர். அதிராம்பட்டினத்திலிருந்து சென்னை. செகந்திராபாத் எர்ணாகுளம், வேளாங்கண்ணி, திருவாரூர், காரைக்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார ஊர்கள், நகரங்கள், பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ள பெரு நகரங்களிக்கு 10க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிராம்பட்டினத்தில் மட்டும் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் கிழக்க கடற்கரைச் சாலை செல்கிறது. 

இதன்வழியாக பொது போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. நானொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. அதிராம்பட்டினத்தில் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம், மின் நிலையம் உள்ளது. 110KV மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காவிரி கடைமடை பகுதியான இங்கு சி.எம்.பி.வாய்க்கால் வழியாக தண்ணீர் குளங்களுக்கு நிரப்பப்படுகின்றன. 20க்கும் அதிகமான நீர்நிலைகளை கொண்ட செழிப்பான ஊர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இங்கு நிலவி வரும் வீடு வரதட்சனை முறை காரணமாக ஊரின் எல்லைகள், மிலாரிக்காடு, மழவேனிர்காடு, தொக்காலிக்காடு, ஏரிப்புறக்கரை எல்லை வரை நீண்டுவிட்டது.

கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி வரலாற்று சிறப்புமிக்க காதிர் முகைதீன் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பல்லாண்டுகளாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் மேற்படிப்பை இங்குள்ள கல்வி நிலையங்களில் முடித்துள்ளனர். 

இந்நகரில் மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகள் பல இயங்கி வருகின்றன. அற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல மாணவர்கள் இங்கு கல்விக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு அதிராம்பட்டினம் நகரம் தஞ்சை மாவட்டத்தின் மிக முக்கிய வர்த்தக நகரமாகவம் அதிக வரி மற்றும் வருவாய் ஈட்டி தரும் நகரமாகவும் கல்வியில் சிறந்த நகரமாகவம் திகழந்து வருகிறது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்பகுதியில் சுமார் 40 பள்ளிவாசல்கள் உள்ளன. கோயில்கள், தேவாலயங்களும் இருக்கின்றன. மும்மத மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் பகுதியாக திகழ்ந்து வருகிறது அதிராம்பட்டினம்.

இதனை தாலுக்காவாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டசபையில் இதனை அறிவித்தார். ஆனால், அதன் பின்னர் தாலுக்காவாக அறிவிக்கும் பணிகள் என்ன நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என ஒரே கிளிக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை RDOவுக்கு ஒரே கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதியை அதிரை பிறை சார்பில் அறிமுகம் செய்துள்ளோம். கீழே உள்ள பட்டனை அழுத்தினால் உங்கள் ஜிமெயில் திறக்கும். அதில் சென்று SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...