அதிராம்பட்டினம்: 110kv துணை மின்நிலைய பணி அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரையில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள காரணத்தால் அங்குள்ள 33kv துணை மின்நிலையத்தில் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி மின் பழுதுகளும், தொடர் மின் தடைகளும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில், அங்கு 110kv திறன்கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், அதற்கான டெண்டர் கோரப்படாமல் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுறையை சந்தித்து அதிராம்பட்டினம் மக்கள் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து 2021 ஜூன் மாதம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அதிராம்பட்டினத்தில் 110kv துணை மின் நிலையம் அமைப்பதற்கு டெண்டர்கோரும் பணிகளை தொடங்க எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இந்த 110kv மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் இதன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இது நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவருமான அஸ்லம் தெரிவித்து உள்ளார்.