அதிரையில் பல்வேறு பகுதிகளில் வடிகால் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மேலத்தெரு, ஹாஜா நகர், பழஞ்செட்டித்தெரு, சால்ட் லேன், புதுமனைத்தெரு போன்ற பகுதிகளில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக புதுமனைத்தெருவில் வடிகால் அமைக்கும் பணிகள் ரு.36.20 லட்சம் மதிப்பீட்டில் நடந்துகொண்டு இருக்கின்றன. புதுமனைத்தெரு அதிரை பால் கடையில் இருந்து செக்கடி மேடு ரேசன் கடை வரை இந்த பழைய வடிகாலை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுமனைத் தெருவில் இருந்து சி.எம்.பி லேன் சாலையை இணைக்கும் சிமெண்ட் ரோட்டின் முகப்பில் உள்ள பாலத்தையும் உடைக்கு முடிவு செய்துள்ளனர். வடிகால் அமைத்த பின் அங்கு புதிய பாலம் அமைக்கப்படும்.
இதனால் செக்கடி மேட்டில் இருந்து மரைக்கா குளம் நோக்கி செல்லும் புதுமனைத் தெரு பிரதான சாலை முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டு கற்கள், மண், கட்டுமான இயந்திரங்களால் அடைக்கப்பட்டு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலை அடைக்கப்பட்டு இருப்பதால் சி.எம்.பி. லேன், நெசவுத் தெரு, மேலத்தெரு வழியாக மக்கள் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இந்த பணிகள் தொடரும் போது புதுமனைத்தெரு சிமெண்ட் சாலை, செக்கடிப்பள்ளி முகப்பு சாலை, செக்கடி மேடு பாதைகளும் முடங்கும் சூழல் உள்ளது. இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் முபீனிடம் அதிரை பிறை சார்பில் விசாரித்தபோது இன்றில் இருந்து சுமார் 10 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்றார். எனவே அடுத்த 10 நாட்கள் இவ்வழியாக வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகள் நடந்து செல்வதும் கடினம்தான். இப்பணிகளை விரைந்து முடித்து பாதையை திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.