எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக்கின் மேலப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலையில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) அதிகாரிகள் திடீரென சோதனைக்கு வந்தனர்.
காவல்துறை உதவியுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீரென நெல்லை முபாரக் வீட்டில் சோதனைக்கு வந்த தகவல் அறிந்து, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள் இன்று நெல்லை முபாரக் வீடு உட்பட 24 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நெல்லை முபாரக், "சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை நடக்கிறது. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்றார்.
இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளார்.