தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதில், தகுதியான 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடுப்படும்." என்றார்.
இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அதிரை பட்டுக்கோட்டை சாலையில் EB அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் டாஸ்மாக் கடை அருகே தனியார் பள்ளிகளும், உணவகங்களும், திருமண மண்டபங்களும், இண்டேன் கேஸ் அலுவலகமும் உள்ளன.
இந்த டாஸ்மாக் கடை அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டும் பொதுமக்கள், மது அருந்த வருபவர்கள் சாலையோரமே அமர்ந்து இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.