அதிரை மக்களின் "இடுப்பை நிமிர்த்தும்" பிரைவேட் வேகத்தடைகள்.. திடீர் திடீர்னு முளைக்குதாம் - தடுக்குமா நகராட்சி?

Editorial
0
அதிராம்பட்டினம்: அதிரையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்துத் தரக்கோரி பல்வேறு மனுக்களை மக்களும், அமைப்புகளும் வழங்கி வருகின்றன. ஒரு சாலை பணியை தொடங்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் சாலைகள் அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே வீடுகளுக்கு குழாய் புதைப்பதற்காக சாலைகளை தோண்டி போட்டுவிடுகிறார்கள். 
குழாய் புதைக்கப்பட்ட பிறகு தோண்டப்பட்ட இடத்தை சமப்படுத்தும் எண்ணம் பெரும்பாலானோருக்கு துளிக்கூட இல்லை. அது மேடு பள்ளமாக மாறிவிடுகிறது. மேலும் சில வீடுகளில் குழாய்க்கு சாலையை தோண்டாமல், வேகத்தடைபோல் அமைத்துவிடுகின்றனர். இப்படி ஆளாளுக்கு செய்வதால் 10 அடிக்கு ஒரு வேகத்தடையை பார்க்க முடிகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் ஏதோ பொது சேவை செய்ததைபோல் சாலைகளில் இளைஞர்கள் வேகமாக போகிறார்கள் என்ற பதில் வருகிறது.
இதே காரணத்தை கூறி குழாய் புதைக்காமலேயே தங்கள் வீட்டு வாசலில் வேகமாக செல்லக்கூடாது என்பதால் வேகத்தடை அமைக்கின்றனர். சிலர் செய்யும் தவறுக்காக மொத்த வாகன ஓட்டிகளையும் இவர்கள் தண்டிக்கிறார்கள். வளைவுகளில் வேகமாக செல்வதை தடுக்க வேகத்தடை அமைக்கிறார்கள். ஆனால், அதை இணைப்பு சாலைகள் அதாவது சந்துகளில் உள்ள சிறிய சாலைகளில் வைக்க வேண்டும். ஆனால் இங்கு பிரதான சாலைகளில் வேகத்தடைகளை வைக்கிறார்கள்.
அதையும் முறையாக அமைப்பது கிடையாது. வளைவாக அல்லாமல் முள் போல் வேகத்தடைகள் உள்ளன. தங்கள் வீடுகளை பார்த்து பார்த்து பக்குவமாக கட்டுபவர்கள், யாரோ பயன்படுத்தும் சாலைதானே என்ற நினைப்பில் இவ்வாறு செய்கின்றனர். அதில் வாகனத்தை ஏற்றி இறக்கும்போது வாகனத்துக்கும் பிரச்சனை, அதை ஓட்டிச்செல்பவருக்கும் பிரச்சனை.  மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்லும் முதியோர்கள் இந்த வேகத்தடையால் ஜம்ப் அடித்து அவர்கள் தலையே மேற்கூரையை தொட்டுவிட்டு வருகிறது.
வேகமாக செல்லக்கூடாது என்று 10 அடிக்கு ஒரு பிரைவேட் வேகத்தடை வைப்பதற்கு பதில் சாலை குண்டும் குழியுமாகவே இருந்துவிட்டு போகட்டுமே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவர்களின் செயலால் வாகன ஓட்டிகளின் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. கியரை குறைத்து பிரேக்கை பிடித்து வேகத்தடையில் ஏற்றி இறக்கி மீண்டும் கியரை அதிகரிப்பதற்குள் அடுத்த வேகத்தடையோ அல்லது குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளமோ வந்துவிடுகிறது என்று புலம்கிறார்கள் வாகன ஓட்டிகள்.
நேற்று வரை சமமாக இருந்த சாலையில் எந்த குறிப்பும் எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென வேகத்தடைகள் முளைத்து நிற்கின்றன. இதனாக் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. ஒருவேளை விபத்துக்கான அபாயம் இருப்பதை உணர்ந்து வேகத்தடை அமைக்க விரும்பினால், அது தொடர்பாக வார்டு உறுப்பினர் அல்லது நகராட்சியில் தெரிவித்து குறிப்பிட்ட இடைவெளிவிட்டு அமைக்கலாம். அந்த வேகத்தடைகள் குறிப்பிட்ட உயரம், அகலத்துடன் இருக்கும்.
அனுமதியின்றி இதுபோல் வேகத்தடை எழுப்புவோர், குழாய்க்காக சாலையை தோண்டிவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தற்போது அதிரை எங்கும் அனுமதியின்றி தனியாரால் எழுப்பப்பட்டு இருக்கும் வேகத்தடைகளை இடித்து சாலையை சமன்படுத்த வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...