அதிராம்பட்டினத்தில் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு ஏராளமான தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், விளையாட்டு அணிகள், அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக கல்வி, விளையாட்டு, சமூகம், குடும்பவியல் என பல துறைகளில் மக்களுக்கு நன்மைகள் நடந்து வருகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டாலும் பிற்காலத்தில் சில நிறுவனங்களில் பதவி ஆசை, தற்பெருமை, சுயநலம் கொண்ட நபர்கள் அதிகாரத்தை கைப்பற்றி அந்த அமைப்புகளின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க இந்த அமைப்புகளின் சார்பில் ஆண்டுதோறும் மார்க்கம், கல்வி சார்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து அணிகளும் டோர்னமெண்டுகளை நடத்தி வெற்றிபெறும் அணிகளுக்கு பல ஆயிரங்களில் பரிசு தொகையையும் கோப்பைகளையும் அளித்து வருகிறார்கள்.
அதேபோல் பல அமைப்புகள் பல்வேறு பெயர்களில் விழாக்களை நடத்தி சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருகிறார்கள். அத்துடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்காக விருது வழங்கும் விழாக்களும் நடந்திருக்கின்றன. இவ்வாறு வழங்கப்படும் விருதுகளும் தகுதியானவர்களுக்கு வழங்கப்படாமல் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், தாங்கள் சொல்வதற்கெல்லாம் ஆம் போடுபவர்கள், அவர்களை கொண்டு தனிப்பட்ட முறையில் பயனடைந்தவர்கள் என்பதை பார்த்தே வழங்குவதை காண முடிகிறது.
இது அல்லாமல் சில விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக வருபவர்களும் எந்த தகுதியின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்கள் என தெரியவில்லை. பேச்சாற்றலை மட்டுமே வைத்து சிலரை தேர்வு செய்வதை பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி விளம்பர பிரியர்கள், தற்புகழ்ச்சி விரும்புபவர்கள், சுயநலவாதிகள், தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள நினைப்பவர்களே சிறப்பு விருந்தினராகவும், விருது வழங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.
கடும் உழைப்பு முயற்சிகளுக்கு பிறகு வெற்றிபெறும் போட்டியாளர்கள் வாங்கும் விருதுகள், பரிசுகள், சான்றிதழ்களின் மதிப்பு என்பது அதன் விலையை பொறுத்து அல்ல. மாறாக அதை யார் கைகளில் இருந்து பெறுகிறோம் என்பதன் அடிப்படையில்தான் அதன் மதிப்பு உள்ளது. ஆனால், சில போட்டி ஏற்பாட்டாளர்கள் இதில் அதிகம் மெனக்கெடுவது கிடையாது.
அதிரையிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் பலர் இருந்தாலும் ஒரு சில சுயநலவாதிகள், விளம்பர பிரியர்களையே விருது வழங்கும் நிகழ்வுகளில் காண முடிகிறது. இதுபோன்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் தவறானவர்களை நன்மதிப்பு மிக்கவர்களாக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துகிறார்கள்.
அவர்களை நல்லவர்கள் என்று நம்பி இளைஞர்களும் மக்களும் அவர்களை பிந்பற்றும் அபாயம் உள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விசயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு சாதகமான விசயங்களை இவர்கள் சாதித்துக்கொள்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே நல்ல நோக்கத்துடன் ஒரு நிகழ்வை நடத்துபவர்கள் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்தலாம்.