அதிராம்பட்டினம்: வேதாரண்யம் - மதுரை இடையே அதிரை வழியாக ரயில் சேவையை தொடங்குவதற்கு தெற்கு ரயில்வே ஆலோசித்து வருகிறது.
திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது நிறைவேற்றபடாத ஒன்றாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அதிரை வழியாக வேளாங்கண்ணி - கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் வாராந்திர ரயில் சேவை மற்றும் அதிரை வழியாக சென்னை செல்லும் செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் சேவையும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை செல்லும் சிறப்பு ரயில் சேவை காலம் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது மேலும் 6 மாத காலம் இந்த ரயில் சேவையை நீட்டிப்பதாக தெற்கு ரயில் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் மார்ச் 1 2023 முதல் ஜூன் 30 2023 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.