அதிரை ரயில் வழித்தடம் "அப்டேட்" ஆகிறது - ரயில்வே துறை உத்தரவு

Editorial
0

தெற்கு ரயில்வே முழுவதையும் மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த, விரைவான ரயில் போக்குவரத்தை உறுதி செய்கிறது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இதுவரை 82 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,664 கிலோ மீட்டா் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிரை ரயில் வழித்தடத்தை மின்மயக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை ஆகிய ரயில் பாதைகளுக்கு மின்மயமாக்கும் பணிகள் தொடர்பாக ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.


திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது நிறைவேற்றபடாத ஒன்றாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிரை வழியாக வேளாங்கண்ணி - கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதிரை வழியாக சென்னை செல்லும் செகந்திராபாத் வாரந்திர ரயில் சேவையும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...