அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அருகே வடிகால் இன்றி தரமற்ற சாலை.. தடுத்து நிறுத்திய மக்கள்!

Editorial
0
அதிரையில் ஒவ்வொரு பகுதியிலும் சாலையை கொண்டு வருவதற்கு மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். புகார் மனுக்கள், போராட்டங்கள் என பல கட்டங்களை கடந்தே சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அப்படி அமைக்கப்படும் சாலைகள் தரமாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதிலே பெருவாரியாக வரும்.

குறிப்பாக அதிரையில் புதிய சாலை அமைக்கும்போது பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல்  அதன் மேலேயே போடுவதால் வீடுகள் தாழ்வாகிக்கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டே புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். 

ஆனால், லாப நோக்கத்தில் செயல்படும் ஒப்பந்ததாரர்கள் அந்த உத்தரவை கடைபிடிப்பது இல்லை. உள்ளாட்சி நிர்வாகங்களும் இதை பெரும்பாலும் கண்டுகொள்ளாமலேயே கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் அதிரை 7 வது வார்டுக்கு உட்பட்ட புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கம் லைனில் புதிதாக சாலை அமைக்கும் பணி இன்று காலை தொடங்கப்பட இருந்தது. வடிகால் வசதியை ஏற்படுத்தித் தராமலும், பழைய சாலையை முறையாக தோண்டி எடுக்காமலும் தரமற்ற முறையில் புதிய சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் பழைய சாலையை தோண்டி எடுத்த பிறகு சாலை அமைப்பதாக ஒப்பந்ததாரர் சம்மதம் தெரிவித்தார். இதுபோல் தரமற்ற சாலை அமைக்கப்படும்போது மக்கள் குரல் கொடுத்தால் தரமான, பல ஆண்டுகள் நிலைத்து இருக்கக்கூடிய சாலையை நம்மால் பெற முடியும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...