அதேபோல் காலி மனைகளுக்கான சொத்து வரியும் 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதிராம்பட்டினம் அண்மையில் நகராட்சியாக மாற்றப்பட்ட பகுதி. பேரூராட்சியாக இருந்தபோதே நகராட்சிக்கு இணையாக அதிகளவில் வரியை செலுத்தி வந்திருக்கிறோம். ஏற்கனவே கஜா புயலால் வீடுகள், கடைகள், தென்னந்தோப்புகள் கடும் சேதமடைந்து கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து வந்த கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாங்கள் அதிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இந்த சூழலில் சொத்துவரி உயர்வு எங்கள் பகுதி மக்களுக்கு பேரிடியாக அமைந்தது.
அதேபோல் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மண்டலங்களாக பிரித்து வரிவசூல் செய்வது தொடர்பாக கடந்த 12/04/2022 அன்று அறிவிப்பு ஒன்று வெளியானது. நகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்ட மூன்று மண்டலங்களின் பட்டியலில் உள்ள தெருக்களில் A மற்றும் B மண்டலங்களில் உள்ள தெருக்கள் பலவற்றில் சாலை வசதிகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், கால்வாய் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் உள்ளன. அதே நேரம் B மண்டலத்தில் உள்ள தெருக்களில் இருக்கும் வீடுகளுக்கு A மண்டலத்திற்கு விதிக்கப்படும் விகிதத்தில் வரி வசூல் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், மண்டலத்துக்கு என நிர்ணயம் செய்யப்பட்ட வரியை வசூலிக்க வலியுறுத்தியும், நகராட்சி மண்டலங்களை மாற்றி அமைத்துத்தர வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சித்துறை செயலாளர், நகர்புற நிர்வாகத்துறை இயக்குநர், மண்டல நகராட்சி இயக்குநர், அதிராம்பட்டினம் நகராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு (SISYA) மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை நடத்தியது. இது தொடர்பாக சிஸ்யா தலைவர் அன்றே வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
இருப்பினும் சொத்து வரி குறைக்கப்படவில்லை. நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கான சான்றிதழை வழங்கி கையோப்பம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக வரி வசூலிக்கப்படுவதை உணர்ந்தால் மக்கள் சங்கத்துக்கு மாலை 5 மணியளவில் வந்து ஆலோசனை வழங்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.