காலை, இரவு திருமண விருந்து, பெருநாள் பசியாறைகளில் மெயின் டிஷ் பரோட்டாதான். வீடுகளில் பெரும்பாலும் பரோட்டா சமைத்தாலும் உணவகங்களில் வழங்கப்படும் அதிரை ஸ்பெஷல் சால்னாவில் தொட்டு பரோட்டாவை சாப்பிடுவது ஒரு தனி சுவை.
குறைவான செலவில் வயிறார சாப்பிட முடியும் என்பதால் அதிரை மட்டுமின்றி தமிழ் பேசும் மக்களின் ஆஸ்தான உணவுகளில் ஒன்றாக திகழ்கிறது பரோட்டா. ஆனால், இதன
விலையும் தற்போது கடுமையாக உயர்ந்துவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரண உணவகங்களில் ஒரு பரோட்டா ரூ.10 க்கு கிடைக்கிறது.
ஆனால், அதிரை உணவகங்களில் பல ஆண்டுகளாக ரூ.7, ரு.8 க்கு விற்கப்பட்டு வந்த பரோட்டா விலை கடந்த ஆண்டு ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வளவுக்கும் சென்னையை விட அதிரையில் கடை வாடகை, வரி போன்றவை குறைவு. ஆனால், எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்கள், ஜி.எஸ்.டி. போன்ற காரணங்களை மனதில் வைத்து மக்கள் இதை சகித்துக்கொண்டனர்.
ஆனால், தற்போது சில கடைகளில் பரோட்டா விலை ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விலையை உயர்த்தி அளவில் பெரிதாக பரோட்டாவை விற்பனை செய்யும் இந்த உணவகங்கள், மற்ற உணவகங்களிலும் இந்த விலை உயர்த்தப்பட்டவுடன் அளவை குறைத்துக் கொள்வார்கள். அடுத்த சில மாதங்களில் மீண்டும் அளவை பெரிதாக்கி விலையை உயர்த்துவார்கள்.
இதுபோன்ற சில உணவகங்களை பார்த்து மற்ற உணவகங்களும் பரோட்டா விலையை உயர்த்துவதாக குமுறுகின்றனர் மக்கள். பணக்கார, உயர் நடத்தர மக்களுக்கு இது பெரிய விசயம் இல்லை. ஆனால், நிரந்தர வருமானமே இல்லாமல் வறுமையில் வாடும் எங்களை போன்ற ஏழைகள் என்ன செய்வது என்று ஏக்கத்தோடு நம்மிடம் தெரிவித்தார் அதிரையை சேர்ந்த நபர் ஒருவர்.
சில மாதங்கள் முன்பாக அதிரையை சேர்ந்த பிரபல தேனீர் கடையில் தேனீர் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து அதிரை மக்கள் குரல் கொடுத்ததால் விலை குறைக்கப்பட்டது. இதேபோல் இதன் விலையையும் குறைக்க அதிரை மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.