அதிராம்பட்டினம்: 2 வது வார்டு சி.எம்.பி லேன் பகுதிக்கு உட்பட்டது இமாம் புஹாரி லைன். ஷிபா மருத்துவமனை மற்றும் இமாம் ஷாபி பள்ளிக்கு பின்புறமாக அமைந்துள்ள இந்த பகுதியில்
ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். சிறுவர்கள் அதிகம் விளையாடும் பகுதியாக இது உள்ளது.
சி.எம்.பி லேனில் இருந்து பட்டுக்கோட்டை, ஷிபா மருத்துவமனை செல்ல பெரும்பாலானோர் இந்த பாதையையே பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள முதல் வளைவில் ஆட்களை விழும் அளவுக்கு 2 ராட்சத குழிகள் உள்ளன.
அதற்கு கீழே கழிவு நீர் செல்கிறது. இரவு நேரங்களில் இவ்வழியில் போதிய வெளிச்சமின்மை உள்ளது. இதனால் அதில் பலரும் தவறி விழுவதற்கான வாய்ப்புகளும், வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கான அபாயமும் உள்ளது. அதேபோல் கழிவுநீர் வடிகாலும் மூடப்படாமல் உள்ளன.
பல மாதங்களாக இந்த குழிகள் இருந்தும் இப்பகுதி வார்டு கவுன்சிலரும் நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக இதை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.