அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட AFCC, சிட்னி ஆகிய 2 கிரிக்கெட் அணிகளும் AFFA என்ற கால்பந்து அணியும் உள்ளூரில் பெரிய தொடர்களை நடத்தி வருவதுடன் மாநில அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு தொடர்களில் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால் இந்த அணிகளுக்கு என சொந்தமாக மைதானம் இல்லை. தற்போது இவர்கள் விளையாடும் மைதானங்கள் நிரந்தரமற்றவையாக உள்ளன. எனவே ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட விளையாட்டு அணிகளுக்காக மைதானம் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக Adirai Friends Welfare Alliance (AFWA) என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆனால், அதன் பைலாவில் சிட்னி அணி சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த அணியின் முன்னாள் இந்நாள் வீரர்களும், முஹல்லாவுக்கு உட்பட்ட மக்களும், வெளிநாடு வாழ் அதிரையர்களும் முன் வைத்தனர். இதனால் மைதானத்திற்கான நிதி வசூலிப்பதிலும் சிக்கல் எழுந்தது. சிட்னி அணியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. சிட்னி அணியை பொறுத்தவரை AFCC, AFFA அணிகளைபோல் தங்களுக்கும் நிர்வாகத்திலும் மைதானத்திலும் சம உரிமை அளித்தால் AFWA வில் இணைய தயார் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவை சேர்ந்தவர்கள் சிட்னி அணியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிட்னி அணியினர் சம உரிமை உட்பட முக்கிய கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தனர். இதேபோல் AFCC, AFFA அணிகளிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி சமரச முடிவு எட்டப்பட்டது.
சிட்னி அணியின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக ஐவர் குழு, ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், AFWA நிர்வாகிகள் மற்றும் 3 அணியினர் முன்பாக உறுதியளித்தது. இதனை அடுத்து குழுவில் இணைய சிட்னி அணி சம்மதம் தெரிவித்தது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் AFWAவிற்கு என 3 அணிகளில் இருந்தும் பொறுப்புதாரிகள் பரிந்துரைக்கப்பட்டு நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கமான மைதானம் வாங்குவதற்கு பெரும் தொகை தேவைப்படுவதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் அதிரை மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் நிதி உதவி வழங்கிடுமாறு சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜா சரீப் கேட்டுக்கொண்டார்.