ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க முயன்று வருகிறது. இதனால் ஒரு தரப்பு மக்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும், வாக்காளர்களின் தனியுரிமை பறிபோவதுடன் அவர்களின் பாதுகாப்புக்கு. அச்சுறுத்தல் ஏற்படும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு திட்டத்தை எதிர்த்து அதன் அபாயங்களை விளக்கி இருக்கிறார்கள்.
இதன் உண்மை தன்மையை அறிந்து மக்களுக்கு அதிரை பிறை தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் பல்வேறு விளக்கங்களை அளித்தோம். இன்று வரை ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என்ற எந்த விதமான கட்டாயமும் இல்லாத சூழலில் வீடு வீடாக சென்று சில அரசு ஊழியர்கள் ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவே இது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையமும் இணைப்பது கட்டாயம் கிடையாது என்று விளக்கமளித்து இருக்கிறது. ஆனால் அதிரையை சேர்ந்த அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் சிலர் ஆதார் - வாக்காளர் அட்டையை இணைக்கும் பணியில் மக்களை பங்கேற்க செய்வதில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
இதனை மக்கள் இணைப்பதால் அதிரையை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயம் கிடைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு பக்கம் தங்கள் கட்சி, கூட்டணி கட்சியின் தலைவர்கள், எம்.பிக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுபக்கம் இவர்கள் இங்கு புரோக்கர் வேலை செய்கிறார்கள்.
தங்களுக்கு கிடைத்த அரசியல் அறிவை கொண்டு மக்களுக்கு நன்மை செய்யாமல் இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். நமது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உறவினர், வார்டு கவுன்சிலர், பழக்கமானவர், நண்பர் என்று நம்பி இதுபோன்றவர்களின் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.